2027 புத்தாண்டு கொண்டாட்டம் விஜய்யின் ‘பைரவா’வுடன் தொடங்குகிறது – ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது!
தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு 2027 புத்தாண்டு கொண்டாட்டத்தை மேலும் சிறப்பாக்கும் வகையில், அவரது நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை 2027 ஜனவரி 1-ம் தேதி பிரம்மாண்டமாக மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில், பி. வெங்கட்ராம ரெட்டி மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான திரைப்படம் ‘பைரவா’. 2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த இப்படம், தற்போது 2027 புத்தாண்டை முன்னிட்டு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இயக்குநர் பரதன், இதற்கு முன்பு விக்ரம் நடித்த ‘தில்’, ‘தூள்’, விஜய் நடித்த ‘கில்லி’, ‘மதுரா’, ‘வீரம்’ உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய் நடிப்பில் வெளியான ‘அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அந்தக் கூட்டணியில் உருவான மற்றொரு படைப்பான ‘பைரவா’, தற்போது மீண்டும் ரசிகர்களைச் சந்திக்கத் தயாராகிறது.
‘பைரவா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘பா பா’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாகத் திகழ்கின்றன.
2017-ம் ஆண்டு வெளியானபோது ஐந்து முதல் ஆறு நாட்களுக்குள்ளாகவே ரூ.100 கோடி வசூலைக் கடந்ததாகக் குறிப்பிடப்படும் ‘பைரவா’, விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான வசூல் சாதனைப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் கிடைக்கும் பார்வையாளர் வரவேற்பும், டிஆர்பி எண்ணிக்கையும் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, 2017-ல் இப்படம் வெளியானபோது குழந்தைகளாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது இளைஞர்களாக வளர்ந்துள்ளனர். அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான ‘பைரவா’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் ரசிப்பதற்கான வாய்ப்பாக இந்த மறுவெளியீடு அமையும். அதேபோல், அப்போது திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவத்தை வழங்கும்.
விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மீண்டும் வெளியிடும் ‘பைரவா’ திரைப்படத்தை SIM Cine International நிறுவனம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
2027 புத்தாண்டின் முதல் நாளை விஜய்யின் ‘பைரவா’ திரைப்படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பெரிய திரையில் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
