ஆறு நாட்களில் ரூ.205 கோடி உலகளாவிய வசூல் – தொடர்ச்சியாக மூன்று ரூ.200 கோடி வெற்றிப் படங்களைக் கொடுத்து சாதனை படைத்த சூர்யா!
நடிகர் சூர்யாவுக்கு 2026-ம் ஆண்டு மிகச் சிறப்பான வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில் வெளியான அவரது ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்த நிலையில், தற்போது தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்துள்ள ‘சீன்’ திரைப்படமும் அந்த வரிசையில் இணைந்துள்ளது. வெளியான ஆறே நாட்களில் உலகளவில் ரூ.205 கோடி வசூலைக் கடந்து இப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘சீன்’ திரைப்படம் கடந்த நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. 2D Entertainment மற்றும் Zhagaram Studios நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் நஸ்ரியா நசீம், நஸ்லென் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘சீன்’, திரையரங்குகளில் தொடர்ந்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. வித்தியாசமான கதைக்களம், விறுவிறுப்பான திரைக்கதை, நகைச்சுவை கலந்த கிரைம் த்ரில்லர் பாணி என வழக்கமான திரைப்பட அனுபவத்திலிருந்து மாறுபட்ட அணுகுமுறையில் உருவாகியுள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குறிப்பாக, இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக சூர்யா ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அவரது வழக்கத்திற்கு மாறான நடிப்பு, நகைச்சுவை கலந்த உடல்மொழி, அதிரடியான அணுகுமுறை என இதுவரை பார்த்திராத புதிய பரிமாணத்தில் சூர்யாவை இயக்குநர் ஜித்து மாதவன் வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் நஸ்ரியா மற்றும் நஸ்லென் ஆகியோரின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
இந்நிலையில், ‘சீன்’ திரைப்படம் வெளியான ஆறாவது நாளில் உலகளவில் ரூ.205 கோடி வசூலைக் கடந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு, ‘205 CRORES+ – 6 DAYS WORLDWIDE GROSS’ என்ற வாசகத்துடன் சூர்யாவின் மாஸான தோற்றம் இடம்பெற்றுள்ள புதிய வசூல் போஸ்டரையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு சூர்யா ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் 2026-ம் ஆண்டில் ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’, ‘சீன்’ எனத் தொடர்ந்து மூன்று திரைப்படங்களை ரூ.200 கோடிக்கும் அதிகமான உலகளாவிய வசூல் சாதனைக்குக் கொண்டு சென்ற நடிகர் என்ற பெருமையை சூர்யா பெற்றுள்ளார். மூன்று திரைப்படங்களும் வெவ்வேறு கதைக்களங்களிலும், மாறுபட்ட இயக்குநர்களின் இயக்கத்திலும் உருவாகியிருந்தாலும், வணிக ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களின் வெற்றியைச் சந்தித்துள்ள சூர்யாவுக்கு இந்த ஆண்டு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், புதிய நடிப்பு அணுகுமுறைகளையும் தேர்வு செய்து வரும் அவர், தனது நடிப்புத் திறனுடன் வணிக ரீதியான வெற்றியையும் தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.
தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே ஆண்டில் மூன்று ரூ.200 கோடி திரைப்படங்கள் என்ற சாதனையுடன் 2026-ம் ஆண்டை சூர்யாவின் வெற்றிகரமான ஆண்டாக மாற்றியுள்ள ‘சீன்’, அவரது திரைப்பயணத்தில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.
