‘KGF’, ‘சலார்’, ‘காந்தாரா’ போன்ற பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படங்களைத் தயாரித்து இந்தியத் திரையுலகில் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ள ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது ஆன்மிகமும் நவீனத் தொழில்நுட்பமும் சங்கமிக்கும் புதிய திரைப்பட முயற்சியில் இறங்கியுள்ளது. டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, இஸ்கான் (ISKCON) அமைப்பின் நிறுவனர் ஆச்சார்யரான ஸ்ரீல ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரின் வாழ்க்கை மற்றும் ஆன்மிகப் பயணத்தைப் போற்றும் ‘சரணாகதி – தி லைஃப் ஆஃப் எ சரண்டர்ட் சோல்’ (ŚARANAGATI – The Life of a Surrendered Soul) என்ற பிரம்மாண்ட அனிமேஷன் திரைப்படத்தை அறிவித்துள்ளது.
ஸ்ரீல பிரபுபாதரின் அசாதாரண வாழ்க்கை, கிருஷ்ண பக்தி இயக்கத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த அவரது ஆன்மிகப் பணி, தன்னலமற்ற சேவை மற்றும் முழுமையான இறை சரணாகதி ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகிறது. திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வியாச பூஜை திருநாளை முன்னிட்டு ஆகஸ்ட் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
AI மற்றும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் புதிய முயற்சி
‘சரணாகதி’ திரைப்படத்தின் முக்கியமான சிறப்பம்சமாக அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மோஷன் கேப்சர் (Motion Capture) தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு அனிமேஷன் காட்சிகள் உருவாக்கப்படுகின்றன. மனிதர்களின் உடல் அசைவுகள், சைகைகள், முகபாவனைகள் உள்ளிட்டவற்றை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தின் மூலம் பதிவு செய்து, செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் டிஜிட்டல் தரவுகளாக மாற்றி அனிமேஷன் கதாபாத்திரங்களில் ஒருங்கிணைக்கின்றனர்.
இதன் மூலம் கதாபாத்திரங்களின் உடல்மொழி, உணர்வுகள் மற்றும் முகபாவனைகளை இயல்பாகவும் தத்ரூபமாகவும் வெளிப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆன்மிகக் கதையாடலையும் நவீன அனிமேஷன் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் புதுமையான முயற்சியாக இப்படம் அமையவுள்ளது.
69 வயதில் தொடங்கிய பயணம்… உலகம் முழுவதும் பரவிய கிருஷ்ண பக்தி இயக்கம்!
ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கைப் பயணம் உலக ஆன்மிக வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. தனது 69-வது வயதில், 1965-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குக் கப்பல் பயணம் மேற்கொண்ட அவர், பகவத் கீதையின் ஞானத்தையும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தெய்வீகச் செய்தியையும் உலக மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் தனது பணியைத் தொடங்கினார்.
தனது ஆன்மிக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாக்குரரின் அறிவுறுத்தலின்படி, கிருஷ்ண உணர்வு தத்துவத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அவரது இடைவிடாத முயற்சி, அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் தன்னலமற்ற சேவையின் விளைவாக கிருஷ்ண பக்தி இயக்கம் உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவியது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்க்கைப் பயணத்தையும் ஆன்மிகப் பணிகளையும் திரையில் கொண்டு வருகிறது ‘சரணாகதி’.
இந்திய ஆன்மிகப் பாரம்பரியத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ்!
‘KGF’ திரைப்படத் தொடர், ‘சலார்’, ‘காந்தாரா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்துள்ள ஹோம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. ‘காந்தாரா’ திரைப்படத்தின் மூலம் கர்நாடகத்தின் பூத கோலா கலாச்சாரத்தைப் பரவலாக அறிமுகப்படுத்தியதுடன், ‘மஹாவதார் நரசிம்மா’ திரைப்படத்தின் மூலம் இந்திய அனிமேஷன் திரையுலகிலும் கவனம் ஈர்த்தது.
அந்த வரிசையில், இந்தியாவின் ஆன்மிகம், நம்பிக்கை, நாகரிகப் பாரம்பரியம் மற்றும் சனாதன தர்மத்தின் கருத்துகளை நவீனத் திரைப்பட மொழியில் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘சரணாகதி’ திரைப்படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் முன்னெடுத்துள்ளது.
படைப்புக் குழுவினர்
கௌர சக்தி தாஸ் எழுதி இயக்கும் இப்படத்தை ராஜேஷ் சிங் மற்றும் லோஹித் ராவ் தயாரிக்கின்றனர். ஸ்ரீதர் ஷிகாரிபுரா விஷுவல் டைரக்டராகப் பணியாற்றுகிறார். டிரான்சென்டென்டல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், டைவ் டீப் AI ஸ்டுடியோவுடன் இணைந்து இப்படம் உருவாகிறது. ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இப்படத்தை உலகம் முழுவதும் வழங்கி வெளியிடுகிறது.
ஸ்ரீரங்கப்பட்டணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சைதன்ய மடம், இஸ்கான் பெங்களூரு, இஸ்கான் மற்றும் பக்திவேதாந்த புத்தக அறக்கட்டளை (BBT) ஆகியவற்றின் ஆசியுடன் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.
ஒரு மனிதரின் முழுமையான இறை சரணாகதி எவ்வாறு உலகளாவிய ஆன்மிக இயக்கமாக மலர்ந்தது என்பதையும், ஸ்ரீல பிரபுபாதரின் தெய்வீகப் பாரம்பரியம் தலைமுறைகளைக் கடந்து எவ்வாறு நிலைத்து நிற்கிறது என்பதையும் எடுத்துரைக்கும் ‘சரணாகதி’, ஆகஸ்ட் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
AI மற்றும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் புதிய முயற்சி