துல்கர் சல்மானின் பிறந்தநாளில் வெளியான ‘மிட்டாய் மழை’… மனதை வருடும் மெல்லிசையால் கவரும் AOT படத்தின் முதல் பாடல்!

10

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய திரைப்படமான ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (Aakasamlo Oka Thara – AOT) படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ (Mittai Mazhai) வெளியிடப்பட்டுள்ளது. மனதை வருடும் மென்மையான காதல் மெலடியாக உருவாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் பாடல், படத்தின் உணர்வுப்பூர்வமான சாராம்சத்தை அழகாக வெளிப்படுத்துகிறது. கதாநாயகியின் பார்வையில் அமைந்துள்ள இந்த மெல்லிசைப் பாடல், நட்சத்திரங்களைத் தொட வேண்டும் என்ற அவளது கனவையும், அந்தக் கனவுகளை அடைய அவளுக்கு அமைதியாக உறுதுணையாக நிற்கும் நாயகனின் ஊக்கத்தையும் கவித்துவமாக சித்தரிக்கிறது. வழக்கமான காதல் பாடல்களைத் தாண்டி, பரஸ்பர நம்பிக்கையும் ஊக்கமும் நிறைந்த ஒரு தனித்துவமான உறவை இந்தப் பாடல் உணர்வுபூர்வமாக பதிவு செய்கிறது.

பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால் எழுதியுள்ள வரிகள், விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் கனவுகளை நோக்கி முன்னேறத் தூண்டும் வாழ்க்கை உணர்வுகளை அழகான உவமைகளின் மூலம் வெளிப்படுத்துகின்றன. பின்னணி பாடகி ரம்யா பெஹாரா, தனது இனிமையான குரலால் பாடலின் உணர்வுகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளார்.

துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி மற்றும் ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT) திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார்.

லைட் பாக்ஸ் மீடியா (Lightbox Media) நிறுவனத்தின் சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் வழங்குகின்றன.

துல்கர் சல்மானின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு இசை விருந்தாக வெளியாகியுள்ள ‘மிட்டாய் மழை’, அதன் இனிமையான இசை, கவித்துவமான வரிகள் மற்றும் உணர்வுபூர்வமான காட்சிகளால் ரசிகர்களின் மனதை வென்று, திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் மேலும் அதிகரித்துள்ளது.