கல்வியின் முக்கியத்துவத்தை பேசும் ‘நடு நாடு’… போஸ்ட் புரொடக்ஷன் நிறைவு; விரைவில் திரையரங்குகளில் வெளியீடு!
சாகித்யா கிரியேஷன்ஸ் மற்றும் தி கிங் மூவி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘நடு நாடு’ திரைப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முழுமையாக நிறைவு செய்து, விரைவில் திரையரங்குகளில் வெளியாக தயாராகியுள்ளது.
அறிமுக இயக்குநர் சந்தோஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அறிமுக நாயகர்களாக எழில் மற்றும் அருண்குமார்நடித்துள்ளனர். கதாநாயகியாக அனுஸ்ரீ நடித்துள்ள நிலையில், ‘காந்தாரா’ திரைப்படம் மூலம் புகழ்பெற்ற சம்பத் ராம்மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், கருத்தம்மா ராஜஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க கடலூர் மாவட்டம் மற்றும் சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கல்வியின் அவசியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தும் சமூகப் பின்னணியிலான திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த பரணி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செந்தில் மாறன் ஒளிப்பதிவை கவனித்துள்ள நிலையில், திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
சமீபத்தில் பிரசாத் லேப் வளாகத்தில் நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், பாடலாசிரியர் மா.ஆ. தாமு ஆகியோரை பாராட்டியதுடன், படத்தின் படத்தொகுப்பாளர் ஆர்.கே. செல்வம் மற்றும் ஒளிப்பதிவாளர் செந்தில் மாறன் ஆகியோரின் பணியையும் வெகுவாகப் பாராட்டினார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், இயக்குநர் சந்தோஷ் மற்றும் இசையமைப்பாளர் பரணி ஆகியோரின் பங்களிப்பை பாராட்டி, திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார்.
இயக்குநரும் தயாரிப்பாளருமான திருமலை, சிறிய படங்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் எனக் கூறியதுடன், ‘நடு நாடு’ திரைப்படத்தின் பாடல்கள், படத்தொகுப்பு, ஒளிப்பதிவு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் தரமான முறையில் உருவாகியுள்ளதால், படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
சமூக அக்கறை கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘நடு நாடு’ திரைப்படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘
‘

‘
‘
‘