ஆகஸ்ட் 28-ல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘ஒன்ஸ் மோர்’… அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

8

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ரிலீஸ் தேதி போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை இணைக்கும் முழுமையான ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது. அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன் பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் பான் இந்திய அளவில் கவனம் பெற்ற இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஹிருதயம், குஷி, ஹாய் நானா உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், ‘ஒன்ஸ் மோர்’ படத்திற்கும் இசையமைத்திருப்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனித்துள்ளார். நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ள நிலையில், யுவராஜ் கணேசன் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஏற்கனவே வெளியாகிய டைட்டில் டீசர், ‘இந்திரா’ மற்றும் ‘வா கண்ணம்மா’ பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள ரிலீஸ் தேதி அறிவிப்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் இணையும் புதிய கூட்டணி, சோனா ஒலிக்கலின் முக்கிய கதாபாத்திரம் மற்றும் ஹேஷாம் அப்துல் வஹாபின் இசை ஆகியவை படத்தின் முக்கிய ஈர்ப்புகளாக அமைந்துள்ளன.

காதல், இசை மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’, வரும் ஆகஸ்ட் 28 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.