சென்னை சாலிகிராமத்தில் அமைந்துள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளிக்கு, நடிகர் தனுஷ் தனது சொந்த செலவில் மூன்று மாடி கொண்ட புதிய கான்கிரீட் கட்டிடத்தை கட்டிக்கொடுத்துள்ளார். இந்த புதிய கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், பள்ளி ஆசிரியர்களின் காலில் விழுந்து ஆசி பெற்ற தனுஷின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை தாய் சத்யா பள்ளியிலேயே கல்வி பயின்ற தனுஷ், தனது பள்ளியுடன் இருந்த நன்றிக்கடனை நினைவுகூரும் வகையில், பழைய மேற்கூரை கட்டிடத்தை அகற்றிவிட்டு அதற்குப் பதிலாக மூன்று தளங்களைக் கொண்ட புதிய கட்டிடத்தை அமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளி நிர்வாகம் அந்தக் கட்டிடத்திற்கு ‘தனுஷ் பிளாக்’ என்று பெயரிட்டுள்ளது.
இந்த திறப்பு விழாவில் நடிகர் தனுஷுடன், அவரது பள்ளித் தோழரும் ஒளிப்பதிவாளருமான குமரன், 1999-ஆம் ஆண்டு பேட்ச் மாணவர்கள், தனுஷின் சகோதரிகள் கார்த்திகா தேவி மற்றும் விமல கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது, தனுஷ் தனது ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து ஆசி பெற்றதுடன், அவர்களுடன் நினைவுப் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டார்.
தனுஷுடன் எல்கேஜி முதல் பள்ளிக் கல்வியைப் பகிர்ந்துகொண்ட ஒளிப்பதிவாளர் குமரன், இந்த உதவி குறித்து பேசுகையில், தானும் தனது மனைவி லட்சுமி கிருபாவும் தனுஷுடன் ஒரே வகுப்பில் படித்ததாகவும், பின்னர் இருவரும் வேறு பள்ளியில் மேல்நிலைப் படிப்பை தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், பள்ளியின் கட்டிட வசதிகள் குறித்து அறிந்த தனுஷ், யாரும் கேட்காமல் தானாக முன்வந்து புதிய கட்டிடத்தை கட்டிக்கொடுக்க முடிவு செய்ததாக அவர் கூறினார். அதுமட்டுமின்றி, பள்ளியில் உள்ள பிற பழைய கட்டிடங்களையும் சீரமைத்து, காலியாக உள்ள இடங்களில் மேலும் புதிய கட்டிடங்களை அமைத்துத் தரவும் தனுஷ் விருப்பம் தெரிவித்திருப்பதாக குமரன் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
திரைத்துறையில் உச்சநிலையை எட்டிய பின்னரும், தன்னை உருவாக்கிய பள்ளியை மறக்காமல் அதன் வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பு செய்திருக்கும் தனுஷின் இந்த செயல், ரசிகர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினரிடையே பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமூக வலைதளங்களிலும் இந்த நிகழ்வு பலரின் கவனத்தை ஈர்த்து, “கல்வி கொடுத்த இடத்திற்கு நன்றிக்கடன் செலுத்திய தனுஷ்” என பலரும் பாராட்டி வருகின்றனர்.







