இயக்குநர் சசி இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள உணர்வுபூர்வ குடும்பத் திரைப்படமான ‘நூறு சாமி’, வரும் ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5 ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படம், ‘பிச்சைக்காரன்’திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் படைப்பாகும். விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘நூறு சாமி’, தாய்மை, இரண்டாவது வாய்ப்பு, குடும்ப உறவுகள் மற்றும் சமூகப் பார்வைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட மனதைத் தொடும் கதையாக உருவாகியுள்ளது. தனது குடும்பத்திற்காக வாழ்நாளை அர்ப்பணித்த விதவைத் தாய் செல்வி, வாழ்க்கையின் பின்னர் கட்டத்தில் தனது மகிழ்ச்சிக்காக ஒரு புதிய முடிவை எடுக்க முயற்சிக்கும்போது, சமூகத்தின் எதிர்ப்புகளையும் பாரம்பரிய சிந்தனைகளையும் எதிர்கொள்ளும் சூழலை படம் உணர்வுபூர்வமாக சித்தரிக்கிறது.
குறிப்பாக, ஒரு தாயின் தியாகங்களை மட்டுமே பேசாமல், தனது தாயின் மகிழ்ச்சிக்காக துணையாக நின்று, அவள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் மகனின் பார்வையை முன்னிறுத்தும் விதத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. கருணை, குடும்ப பாசம், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளின் முக்கியத்துவத்தை பேசும் இந்தக் கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.
படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் மற்றும் அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உணர்வுபூர்வமான கதையாடல் மற்றும் வலுவான நடிப்புகளுக்காக திரையரங்க வெளியீட்டின்போது இந்த திரைப்படம் பாராட்டுகளைப் பெற்றது.
டிஜிட்டல் வெளியீட்டை முன்னிட்டு இயக்குநர் சசி கூறுகையில், “‘நூறு சாமி’ உண்மையான வாழ்க்கையிலிருந்து பிறந்த கதை. வயது அல்லது சமூக எதிர்பார்ப்புகளைத் தாண்டி, அன்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்பதற்காக இந்தப் படத்தை உருவாக்கினேன். திரையரங்குகளில் ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. இப்போது ZEE5 மூலம் இன்னும் பல குடும்பங்களை இந்தக் கதை சென்றடைவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.
நடிகர் விஜய் ஆண்டனி கூறுகையில், “ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கும். ஆனால் ‘நூறு சாமி’ அதன் உணர்வுகளால் எனக்கு மிகவும் நெருக்கமான படம். தாய்–மகன் உறவை மையமாகக் கொண்ட இந்தக் கதையுடன் ரசிகர்கள் ஆழமாக இணைவார்கள் என்று நம்புகிறேன். பல மொழிகளில் குடும்பங்கள் ஒன்றாக இந்தப் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது,” என்று தெரிவித்தார்.
உணர்வுகளையும் சமூகச் செய்தியையும் ஒருங்கே சொல்லும் ‘நூறு சாமி’, வரும் ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல்தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.
