உலக சாதனையிலிருந்து பிரம்மாண்ட கமர்ஷியல் சினிமாவுக்கு: புதிய படத்துடன் களமிறங்கும் இயக்குநர் ஷிவ் மாதவ்
வித்தியாசமான முயற்சிகளுடன் தமிழ் சினிமாவில் தடம் பதித்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஷிவ் மாதவ். இவரது இயக்கத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான அறிவியல் பின்னணியிலான திரைப்படம் ‘3.6.9’ பல்வேறு சாதனைகளைப் பதிவு செய்தது. உலகளவில் வெறும் 81 நிமிடங்களில் உருவாக்கப்பட்ட திரைப்படம் என்ற சாதனையையும், தமிழ்நாட்டிலிருந்து இரண்டு உலக சாதனைகளைப் பெற்ற முதல் திரைப்படம் என்ற பெருமையையும் இப்படம் பெற்றது. 100-க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்ற இந்தப் படம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது.
விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற போதிலும், போதிய விளம்பரங்கள் இல்லாததால் ‘3.6.9’ திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களைச் சென்றடையவில்லை என்கிறார் இயக்குநர் ஷிவ் மாதவ்.
தன்னுடைய முதல் படத்துக்குக் கிடைத்த அனுபவம் குறித்து பேசிய ஷிவ் மாதவ், “என்னுடைய முதல் படம் ‘3.6.9’. தமிழ்நாட்டில் இரண்டு உலக சாதனைகளைச் செய்த முதல் படமாக அது அமைந்தது. ஹாலிவுட்டில் கூட யாரும் முயற்சி செய்யாத விஷயத்தை நாங்கள் செய்தோம். 81 நிமிடங்களில் 100 பேர் நடித்த ஒரு படத்தை ஒரே இயக்குநர் உருவாக்கினார் என்பது பலருக்கும் தெரியாமலேயே போய்விட்டது.
அந்த இரண்டு உலக சாதனைகள் கிடைத்த பிறகு நம்முடைய பயணம் பெரிய அளவில் செல்லும் என்று நினைத்தேன். ஆனால் நான் நினைத்தது எதுவுமே இங்கு நடக்கவில்லை. என்னுடைய கனவுகள் அனைத்தும் தகர்ந்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. வட இந்தியாவிலும், கேரளாவிலும் இப்படியொரு சாதனைப் படம் எடுத்திருக்கிறேன் என்று தெரிந்ததும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கிறார்கள். ஆனால் என்னுடைய தமிழ்நாட்டில் எனக்கு அந்த மரியாதை கிடைக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளில் பல தயாரிப்பாளர்கள் மீண்டும் இதுபோன்ற சாதனைப் படங்களை உருவாக்கலாம் என்று கூறி என்னைத் தேடி வந்தார்கள். ஆனால் மீண்டும் சாதனைப் படங்களை மட்டுமே எடுக்கும் இயக்குநர் என்ற அடையாளத்துக்குள் சிக்கிக்கொள்ள நான் விரும்பவில்லை. காரணம், சாதனைக்கு இங்கு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. சினிமா என்பதே வணிகம் தான். அதனால் நாமும் வணிகத்தை நோக்கி பயணிப்போம் என்ற புரிதலுடன் தற்போது புதிய படத்திற்குத் தயாராகியுள்ளேன்” என்றார்.
தன்னுடைய அடுத்த படம் குறித்து பேசிய அவர், இது அறிவியல், ஃபேண்டஸி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் கலந்த பிரம்மாண்டமான சூப்பர் ஹீரோ படமாக உருவாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
“இந்தப் புதிய படத்தின் கதைக்களமும் விஞ்ஞான பின்னணியில் தான் உருவாகியுள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் அதிகமான செட்களை அமைத்து, சிஜி மட்டுமே நம்பாமல் பல்வேறு புதிய முயற்சிகளை இதில் கொண்டு வருகிறேன். மினியேச்சர்களைப் பயன்படுத்தி பெரிய பட்ஜெட்டில், கமர்ஷியலாகவும் ஜாலியாகவும், அதே நேரத்தில் 80-களில் நடக்கும் ஒரு கதையை மையமாக வைத்தும் இந்தப் படம் உருவாகிறது. அதில் அறிவியலும் ஃபேண்டஸியும் கலந்து ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டாக இது இருக்கும்.
நான் எதிர்பார்த்து வந்த சினிமா இப்போது எனக்குக் கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கையுடன் பயணிக்கிறேன். உலகத்திலேயே யாரும் செய்யாததை நாம் செய்ய வேண்டும் என்று நினைத்து வரும்போது, சில நேரங்களில் நாம் நினைத்த விஷயத்தை விஷுவலாக சொல்ல முடியாமல் போய்விடுகிறது. இந்தப் புதிய படத்தில் வழக்கமான சினிமா அம்சங்கள் அனைத்தும் இருக்கும். அதே நேரத்தில் நான் சொல்ல நினைக்கும் ஒரு விஷயமும் இதில் இருக்கிறது. இதிலும் உலக சாதனை செய்ய முயற்சிக்கிறேன். ஆனால் இந்த முறை என்னுடைய முயற்சி ஹாலிவுட்டுக்கு நிகராக படத்தின் மேக்கிங்கில் பல புதிய விஷயங்களைச் செய்வதாக இருக்கும்” என்றார்.
‘3.6.9’ படத்துக்குப் பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக VFX, AI உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பற்றி கற்றுக்கொண்டு வந்ததாகவும், அதற்கேற்ற வகையில் புதிய படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளதாகவும் இயக்குநர் தெரிவித்துள்ளார். அதற்கேற்ற வகையில் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களைத் தேர்வு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களை இணைத்து உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, மினியேச்சர் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகவும், படத்தின் பெரும்பாலான பணிகள் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளதாகவும் ஷிவ் மாதவ் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய முதல் படத்தில் நடித்த மறைந்த இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் குறித்தும் ஷிவ் மாதவ் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
“என்னுடைய முதல் படத்தில் பாக்யராஜ் சார் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் அவர் இப்போது நம்முடன் இல்லை. நான் சில சமயங்களில் சோர்ந்துபோன நேரங்களில் கூட, ‘ஷிவா, உன்கிட்ட ஒரு பெரிய பொட்டன்ஷியல் இருக்கு. நம்பிக்கையோட ஓடு. உன்னால் முடியும்’ என்று சொல்லி எனக்கு உந்துசக்தி கொடுத்திருக்கிறார்.
பல சமயங்களில் அவருடைய வீட்டுக்கு என்னை அழைத்து, ஊக்கப்படுத்தி அனுப்புவார். அந்த மாதிரி ஒரு குருவை இழந்தது மிகப்பெரிய வேதனை. அவர் இறந்த தினத்தன்று அவரது கால்மாட்டிலேயே நான் நின்றுகொண்டிருந்தேன். என்னுடைய முதல் படம் எவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டது என்பது அவருக்குத் தெரியும். அவரும் அந்தப் படத்தைப் பற்றி எனக்காக நிறைய பேசியிருக்கிறார். இப்போதும் சாருடைய ஆசீர்வாதம் எனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் இந்தப் பயணத்தைத் தொடர்கிறேன்” என்றார்.
‘3.6.9’ மூலம் சாதனையை நோக்கி பயணித்த ஷிவ் மாதவ், தற்போது கமர்ஷியல் சினிமாவின் பிரம்மாண்ட உலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார். அறிவியல், ஃபேண்டஸி, சூப்பர் ஹீரோ அம்சங்கள் மற்றும் ஹாலிவுட் பாணியிலான மேக்கிங் என பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் நடிகர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.