நடிகை, கூத்து கலைஞர், மேடை நாடகக் கலைஞர், யூட்யூப் பிரபலம் எனப் பன்முகத் திறமையுடன் இயங்கி வரும் மாயா எஸ். கிருஷ்ணன், தற்போது ஸ்டாண்ட் அப் காமெடி கலைஞராகவும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.
சென்னை மியூசிக் அகாடமியில் ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை நடைபெற்ற அவரது ‘பொம்ப்ளேள்’ ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி, இதற்கு முக்கிய சாட்சியாக அமைந்துள்ளது. 1,500 இருக்கைகள் கொண்ட அரங்கம் நிகழ்ச்சிக்கு ஒரு மாதத்திற்கு முன்பே முழுமையாக விற்றுத் தீர்ந்த நிலையில், மியூசிக் அகாடமியில் புதிய சாதனையை மாயா எஸ். கிருஷ்ணன் நிகழ்த்தியுள்ளார். நிகழ்ச்சி நடைபெற்ற நாளில் அரங்கம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.
‘மஞ்சுளா டீச்சர்’ என்ற கற்பனைக் கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நிலவும் பாகுபாடு, பாரபட்சம், வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் ஆதிக்க மனப்பான்மை உள்ளிட்ட பல்வேறு சமூகப் பிரச்சினைகளை நையாண்டி கலந்து பேசும் மாயாவின் டிஜிட்டல் வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
இந்த நிலையில், இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி மாலை 7 மணிக்கு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சியில் மாயா எஸ். கிருஷ்ணன் தனி ஆளாக மேடையை ஆக்கிரமித்து, பார்வையாளர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.
நடிப்பு மற்றும் திரை அனுபவங்களுடன், கூத்து மற்றும் மேடை நிகழ்த்துக் கலைகளில் பெற்ற அனுபவத்தையும் தனது நகைச்சுவை நிகழ்த்தலில் திறம்படப் பயன்படுத்தி வரும் மாயா, பார்வையாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் தனித்துவமான மேடை மொழியை உருவாக்கியுள்ளார்.
ஒரு தருணத்தில் அரங்கமே சிரிப்பால் அதிர, அடுத்த கணமே எதிர்பாராத நையாண்டி வசனத்தால் பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறையும் சூழல் என நிகழ்ச்சி தொடர்ந்து பல்வேறு உணர்வுகளை கடத்தும் வகையில் அமைந்திருந்தது. இதன் பின்னர் ‘மஞ்சுளா டீச்சர்’ கதாபாத்திரத்துடன் இணைந்து பார்வையாளர்கள் பாடி, ஆடி கொண்டாடிய தருணங்களும் நிகழ்ச்சிக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தன.
சிரிப்பில் தொடங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தி, பின்னர் கொண்டாட்டமாக மாறிய ‘பொம்ப்ளேள்’, பார்வையாளர்கள் வெறுமனே அமர்ந்து ரசிக்கும் வழக்கமான காமெடி நிகழ்ச்சியாக இல்லாமல், அவர்களையும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாற்றிய தனித்துவமான மேடை அனுபவமாக அமைந்தது.
மஞ்சுளா டீச்சருடன் பார்வையாளர்கள் இணைந்து பாடியதும், ஆடியதும், ஒரு கட்டத்தில் அரங்கமே காமெடி ஷோவைத் தாண்டி கொண்டாட்டக் களமாக மாறியதும் நிகழ்ச்சியின் மறக்க முடியாத தருணங்களாக அமைந்தன.
இதன் மூலம் சிரிக்கவும், அதிர்ச்சியடையவும், சிந்திக்கவும், பாடவும், ஆடவும் வைத்த முழுமையான ‘கூத்து’ அனுபவமாக ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சி அமைந்தது.
மாயா எஸ். கிருஷ்ணனின் கலைப் பயணத்தில் ‘மஞ்சுளா டீச்சர்’ கதாபாத்திரம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. சமூகத்தில் பெண்களைச் சுற்றி நிலவும் பல்வேறு பாகுபாடுகள் மற்றும் ஆதிக்க மனப்பான்மைகளை நகைச்சுவை மற்றும் நையாண்டி வழியாகப் பேசுவதால், இந்தக் கதாபாத்திரம் டிஜிட்டல் தளங்களிலும் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேறிய ‘பொம்ப்ளேள்’ நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்று அரங்கேற்ற மாயா எஸ். கிருஷ்ணன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூத்து, நாடகம், நடிப்பு மற்றும் நகைச்சுவை என பல்வேறு கலை வடிவங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட ‘பொம்ப்ளேள்’, மாயா எஸ். கிருஷ்ணனின் தனித்துவமான கலைப் பயணத்தில் மற்றுமொரு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது.



