கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில், தீவிர உடல்நலப் பாதிப்புகளுடன் போராடி வரும் 25 திருநங்கைகளின் நலனுக்காகப் படக்குழு நிதியுதவி வழங்கியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் பிலிம்ஸ் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முயற்சி, படத்தின் வெற்றியைச் சமூக நலனுடன் இணைத்துள்ளது.
மனிதநேயம், கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ‘டோரதி’ திரைப்படம், திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ரசிகர்களிடையே உணர்வுபூர்வமான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் உணர்வுகளையும், ஒவ்வொருவரும் கண்ணியத்துடன் வாழ வேண்டியதன் அவசியத்தையும் பார்வையாளர்கள் பாராட்டியுள்ளனர். ரசிகர்கள் பகிர்ந்துகொண்ட தனிப்பட்ட அனுபவங்களும் படக்குழுவினரை நெகிழச் செய்துள்ளன. இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, உடல்நலப் பாதிப்புகளால் சிரமங்களை எதிர்கொண்டு வரும் திருநங்கைகளுக்கு உதவிப் புரியப் படக்குழு முன்வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்ற ‘டோரதி’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் இந்த நிதியுதவித் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருநங்கைகள் நலனுக்காகச் செயல்பட்டு வரும் ‘எங்கள் சகோதரன்’ அமைப்பின் பிரதிநிதிகள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மருத்துவ மற்றும் நிதியுதவி தேவைப்படும் 25 பேரை விழாவில் அறிமுகப்படுத்தினர். அவர்களில் புற்றுநோய், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கை அல்லது கால்களை இழந்தவர்கள், பிறவியிலேயே பார்வையற்றவர்கள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருபவர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்கான நிதியுதவிக் காசோலைகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வழங்கினார்.
நிதியுதவி பெறுபவர்களை விழாவுக்கு அழைத்து வருவது குறித்துத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது, அவர்களின் உடல்நிலை மற்றும் பயணச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு கார்த்திக் சுப்புராஜ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும், உடல்நலப் பிரச்சினைகளையும் பொருட்படுத்தாமல், தங்களை நெகிழச் செய்த திரைப்படத்தை உருவாக்கிய இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடன் அவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த நிதியுதவி, அடுத்த ஓராண்டுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் உணவுச் செலவுகளைச் சமாளிக்க உதவும் என்று பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். உடல்நலப் பாதிப்புகளுடன் மட்டுமல்லாமல், மாற்றுத்திறன் சார்ந்த சவால்களையும் சமூகப் புறக்கணிப்பையும் எதிர்கொண்டு வரும் இவர்களுக்கு, அன்றாடத் தேவைகளை நிறைவேற்ற இந்த உதவி பெரும் ஆதரவாக இருக்கும் என்று ‘எங்கள் சகோதரன்’ அமைப்பின் பிரதிநிதிகளான சுதா மற்றும் ஜெயா தெரிவித்தனர்.
சமூகத்தின் முன்முடிவுகளைக் கடந்து, மனிதர்களின் உணர்வுகளையும் கண்ணியத்தையும் முன்னிறுத்தும் ‘டோரதி’ திரைப்படத்தின் நோக்கத்தை இந்த நலத்திட்டம் பிரதிபலிக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வெற்றி, சமூகத்திலும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் படக்குழு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை ஜோதி தேஷ்பாண்டே, குனீத் மோங்கா கபூர் மற்றும் அச்சின் ஜெயின் ஆகியோர் தயாரித்துள்ளனர். மேஸ்ட்ரோ இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை வழங்கியுள்ளன.


