இந்தியாவின் 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான அதிகாரப்பூர்வப் பரிந்துரையாகத் தேர்வாகியுள்ள ‘கோந்தல்’ திரைப்படத்தின் சர்வதேச டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குநர் சந்தோஷ் தாவகார் இயக்கத்தில், இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் என ஏழு மொழிகளில் நாளை (நவம்பர் 13) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
உளவியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் சர்வதேச டிரெய்லர், மர்மம் நிறைந்த கதைக்களம், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மகாராஷ்டிராவின் பாரம்பரியக் கலாசாரப் பின்னணியைப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ஒரு மராத்தி திரைப்படம் ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டு, உலகளாவிய அளவில் திரையரங்குகளைச் சென்றடைவது இதுவே முதல்முறை எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, துபாய் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளிலும் இப்படம் வெளியாகிறது.
மகாராஷ்டிராவின் கலாச்சாரப் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், புதுமணத் தம்பதிகளான சுமன் மற்றும் ஆனந்த்ராவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஆசை, கடமை, பக்தி ஆகியவை ஒன்றோடொன்று மோதும்போது அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களும், மர்மமான சம்பவங்களுமே கதையின் அடிப்படையாக அமைந்துள்ளன. மணமகளின் ஏக்கம், கணவனின் கடமைகள் என இருவரும் புரியாத புதிர்கள் நிறைந்த சூழலில் சிக்கிக்கொள்ளும்போது, வெளிப்படையாகத் தெரிவதுதான் உண்மையா என்ற கேள்வியையும், உண்மையின் மறுபக்கத்தையும் இப்படம் ஆராய்கிறது.
படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் தாவகார் பேசுகையில், “இந்தியத் திரைப்படங்கள் குறித்த உலகளாவிய பார்வை பெரும்பாலும் வறுமை மற்றும் சாதிய மோதல்கள் சார்ந்த கதைகளால் உருவாக்கப்படுகிறது. அவைதான் கள யதார்த்தம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அவை மட்டுமே இந்தியாவின் முழுமையான அடையாளம் அல்ல.
‘கோந்தல்’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல; தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களின் சங்கமம். இந்தப் பாரம்பரியத்தை உலகம் அறிந்துகொள்ளச் செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆஸ்கர் விருதுகள் போன்ற சர்வதேச அங்கீகாரங்கள், நமது கலாச்சாரத்தை இந்தியாவைத் தாண்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கொண்டு செல்லத் திரைப்பட இயக்குநர்களுக்கு உதவுகின்றன” என்றார்.
99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரையாக இடம்பெற்றுள்ள ‘கோந்தல்’, சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. மேலும், பல்வேறு விருதுப் பிரிவுகளிலும் இப்படம் பரிசீலிக்கப்பட்டு வருவது படத்தின் சர்வதேசப் பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
அதேபோல், 56-வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் (IFFI), சிறந்த இயக்குநருக்கான Silver Peacock விருதை சந்தோஷ் தாவகார் வென்றுள்ளார். இப்படத்தைப் பாராட்டிய நடுவர் குழுவினர், இது நிஜ உலகில் நிகழும் ஷேக்ஸ்பியரின் கதைபோல் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சோஹானி, நிஷாத் போயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்குநர் சந்தோஷ் தாவகார், தனது தயாரிப்பு நிறுவனமான தாவகார் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் தீக்ஷா தாவகாருடன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளார். அமலேந்து சௌத்ரி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, திரைப்படத்தின் தொடக்கத்திலேயே சுமார் 25 நிமிடங்கள் இடைவெளியின்றி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட காட்சி இடம்பெற்றுள்ளது. ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, இசை மற்றும் நடிப்பு எனப் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களிலும் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருதுக்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பரிந்துரை, சர்வதேசத் திரைப்பட விழாக்களில் கிடைத்த அங்கீகாரம், இளையராஜாவின் இசை எனப் பல சிறப்புகளுடன் வெளியாகும் ‘கோந்தல்’, தற்போது வெளியாகியுள்ள சர்வதேச டிரெய்லர் மூலம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நாளை ஏழு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படம், இந்தியக் கலாச்சாரத்தையும் மர்மம் நிறைந்த உளவியல் கதையையும் சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கத் தயாராகியுள்ளது.


