கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு; அதிரடி காட்சிகளால் எதிர்பார்ப்பை எகிற வைத்த பி.எஸ். மித்ரன்!
கார்த்தி கதாநாயகனாக, இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் மற்றும் VVOY மீடியா சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முன்னதாக வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி வரும் இந்த இரண்டாம் பாகம், முதல் படத்தை விட இன்னும் பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள டீசர், அதிரடி ஆக்ஷன் காட்சிகள், சர்வதேச தரத்தில் வடிவமைக்கப்பட்ட காட்சியமைப்புகள் மற்றும் கார்த்தியின் வித்தியாசமான திரைத் தோற்றங்களால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
டீசரின் ஒவ்வொரு காட்சியும் பரபரப்பையும் மர்மத்தையும் தக்கவைத்திருப்பதோடு, படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. கார்த்தியின் ஸ்டைலிஷ் தோற்றம், அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகம் பேசப்படும் அம்சங்களாக மாறியுள்ளன.
மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், அதிரடி சண்டைக் காட்சிகளை திலீப் சுப்பராயன்வடிவமைத்துள்ளார். கலை இயக்கத்தை ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பை வேலுக்குட்டி கவனித்துள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகத்தை ஏ. பால் பாண்டி மேற்கொண்டுள்ள நிலையில், ஏ. வெங்கடேஷ் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். தொழில்நுட்ப ரீதியாகவும், தயாரிப்பு தரத்திலும் மிக உயர்ந்த அளவில் உருவாகி வரும் இந்த திரைப்படம், இந்த ஆண்டின் முக்கியமான ஆக்ஷன் வெளியீடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வெளியான சில நிமிடங்களிலேயே டீசர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி, ரசிகர்களிடமிருந்து உற்சாகமான வரவேற்பைப் பெற்று வருகிறது. விரைவில் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியாக உள்ள நிலையில், ‘சர்தார் 2’திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.