கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் முதல் பாடல் ‘இக்னோர்’ வெளியீடு!

10

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. நடிகர் கே. மணிகண்டன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை சந்தோஷ்குமார் எழுதி இயக்கியுள்ளார். அதிரடி ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் ஹிப் ஹாப் இசையின் முன்னோடியாகக் கொண்டாடப்படும் மலேசிய ராப்பர் யோகி பி, நடிகையும் பாடகியுமான அதிதி ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோர் இணைந்து இப்பாடலைப் பாடியுள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பதுடன், இசை ஒருங்கிணைப்பு மற்றும் நிரலாக்கப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். பாடல் வரிகளை எம். கே. பாலாஜி எழுதியுள்ளார். இப்படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

ஒவ்வொரு கட்டத்திலும் புறக்கணிப்புகளையும் அவமானங்களையும் சந்திக்கும் ஒரு காவல்துறை அதிகாரியின் வலியையும், அதிலிருந்து அவர் மீண்டெழும் மன உறுதியையும் மையமாகக் கொண்டு ‘இக்னோர்’ பாடல் உருவாகியுள்ளது. வலியால் முடங்கிவிடாமல், தனக்கு நேர்ந்த அவமானங்களையே தனது பலமாக மாற்றிக்கொள்ளும் ஒருவரின் மனநிலையை அதிரடியான ராப் இசை மூலம் இப்பாடல் வெளிப்படுத்துகிறது. பாடலின் இடையே இடம்பெறும் நாட்டுப்புறச் சடங்கு மரபைச் சார்ந்த இசை மண்ணின் இயல்பான உணர்வை வெளிப்படுத்துவதுடன், தொடர்ந்து ஒலிக்கும் பறை இசை பாடலுக்கு மேலும் உத்வேகத்தையும் எதிர்ப்புணர்வையும் அளிக்கிறது. தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் மீண்டெழும் மன உறுதியைப் பேசும் இப்பாடல், பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி வெற்றியாளராக மாறுகிறார் என்பதையும் உணர்த்துகிறது.

‘மக்கள் காவலன்’ திரைப்படம், கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. ஊழல்கள் நிறைந்த அமைப்பு அவரை சரணடைவதா அல்லது எதிர்த்து நிற்பதா என்ற இக்கட்டான நிலைக்குத் தள்ளுகிறது. உயிர் வாழ்வதற்காகத் தொடங்கும் அவரது தனிப்பட்ட போராட்டம் நாளடைவில் மிகப்பெரிய மக்கள் போராட்டமாக உருவெடுக்கிறது. தான் ஒருபோதும் விரும்பாத தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கும் அவர் ஆளாகிறார். போராட்டம் தீவிரமடைந்து எதிர்ப்புக்கான விலை அதிகரிக்கும்போது, ஒரு சாதாரண மனிதனுக்கும் மக்களின் காவலனுக்கும் இடையிலான எல்லை மெல்ல மறையத் தொடங்குகிறது.

ஒரு சாதாரண மனிதன் எப்படிப் பல்வேறு சவால்களைக் கடந்து மக்களின் காவலனாக மாறுகிறான் என்பதை அறிமுகப்படுத்தும் வகையில் இப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர்’ அமைந்துள்ளது. கே. மணிகண்டனின் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வும், யோகி பி, அதிதி ஷங்கர், நிவாஸ் கே. பிரசன்னா ஆகியோரின் கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ராப் பாடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.